பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் பால் சிங் என்பவர் 'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பானது பஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாபை பிரித்து தனிநாடாக அறிவிக்கக் கோரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் இந்த அமைப்பின் ஆதரவாளர் ஒருவரை போலீசார் கைது செய்து காவல் நிலைய சிறையில் அடைத்த சம்பவத்தில் அம்ரித் பால் சிங் தலைமையில் சிலர் காவல் நிலையத்திற்கு சென்று கைது செய்யப்பட்டவரை விடுவிக்கக் கூறி வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அம்ரித் பால் சிங்கை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அம்ரித் பால் சிங் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை பஞ்சாப் போலீசார் கைது செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய முயன்ற போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அம்ரித் பால் சிங்கை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதனையடுத்து அம்ரித் பால் சிங் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் சில நாட்களுக்கு கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்தியா சார்பில் கனடாவிற்கு பரிசாக அளிக்கப்பட்ட 6 அடி உயரமுள்ள மகாத்மா காந்தி வெண்கல சிலையானது ஒன்று ஓன்டாரியோ மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனை காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த வியாழக்கிழமை பெயிண்ட் ஊற்றிச் சிதைத்ததுடன், சிலையின் கீழ்ப்பகுதியில் மோடிக்கு எதிராகவும், இந்திய அரசுக்கு எதிரான வாசகங்களையும் எழுதியுள்ளனர். இந்த செயல் தற்போது உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னதாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் லண்டனில் செயல்படும் இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்டு இந்திய தேசியக்கொடியை அகற்றிவிட்டு காலிஸ்தான் கொடியைப் பறக்கவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.