கரோனா காலத்தில் அரசு விதிமுறைகளை மீறியதாகவும், பங்குச்சந்தை வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்ததாகவும் கூறி இரண்டு பேருக்கு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது வடகொரியா.
வடகொரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள கேசாங்கில் கரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்ட சூழலில், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்கவும், அப்பகுதியில் முழு ஊரடங்கு பிறப்பித்தும் உத்தரவிட்டார் அதிபர் கிம் ஜாங் உன். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. உலகம் முழுவதும் ஆறு கோடிக்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதுவரை வடகொரியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த சூழலில், சில நாட்களுக்கு முன்னர் அதிபர் கிம் ஜாங் உன் மக்களிடையே உரையாற்றி போது, தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை என்று பேசினார். அதேநேரம், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அங்கு பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரோனா காலத்தில் அரசு விதிமுறைகளை மீறியதாகவும், பங்குச்சந்தை வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்ததாகவும் கூறி வடகொரியா இரண்டு பேருக்கு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளதாக தென்கொரிய உளவுத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. உளவுத்துறை அமைப்பின் கூற்றுப்படி, "வடகொரியாவில் பங்குச்சந்தை வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்ததாகக்கூறி உயர் அதிகாரி ஒருவருக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றி உள்ளார் கிம். மேலும் . கரோனா கட்டுப்பாட்டுச் சுங்க விதிகளை மதிக்காமல் வெளிநாடுகளிலிருந்து சரக்குகளை இறக்குமதி செய்த ஒருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.