அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கருப்பினத்தவர் ஒருவரை போலீஸார் கொன்றதால் ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அங்குப் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
மினசோட்டா தலைநகரான மினியாபொலிஸ் நகரின் ஒரு பகுதியில் கள்ளநோட்டு புழங்குவதாக போலீஸாருக்கு கடத்த வாரம் தகவல் வந்தது. இதனையடுத்து அங்குச் சென்ற போலீஸார், அப்பகுதியில் வாகனத்தின் வந்த ஜார்ஜ் பிலாய்ட் என்ற கருப்பினத்தவரை வழிமறித்து விசாரித்துள்ளனர். மேலும், அவரை காரை விட்டு கீழே இறங்கச் சொல்லியுள்ளனர், ஆனால் ஜார்ஜ் காரை விட்டு இறங்காததால், அவரை வெளியே இழுத்த போலீஸார், அவரை கீழே தள்ளி கைகளின் விலங்கை மாட்டியுள்ளனர். அப்போது ஒரு காவலர், ஜார்ஜின் கழுத்தில் தனது முழங்காலை வைத்து கடுமையாக அழுத்தியுள்ளார். இதனால் சுவாசிக்க முடியாமல் தவித்த ஜார்ஜ், "என்னால் மூச்சுவிட முடியவில்லை, என்னைக் கொன்றுவிடாதீர்கள்" என போலீஸாரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் இதனைக் காதில் வாங்காத அந்தக் காவலர், தொடர்ந்து சுமார் எட்டு நிமிடங்கள் அவரது கழுத்தைக் காலால் அழுத்திக்கொண்டே இருந்துள்ளார். இதனால் ஜார்ஜ் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து இனவெறியுடன் செயல்பட்ட அந்தக் காவலர்களுக்கு எதிராக நடடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். பல இடங்களில் இந்தப் போராட்டங்கள் கலவரங்களாகவும் மாறின, மினசோட்டாவில் காவல்நிலையம் தீவைத்து எரிக்கப்பட்டது, வெள்ளை மாளிகை முற்றுகையிடப்பட்டது. பல மாகாணங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த விவகாரத்தில் நீதி கேட்டு போராட்டம் மேற்கொண்டனர். இதில் பல இடங்களில் போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போராட்டங்களைக் கலைத்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நான்கு காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையிலும், பல இடங்களில் இனவெறிக்கு எதிராக மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து வருகின்றனர். இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.