அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வடகொரியா. அதேபோல் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.
ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் வடகொரியா அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி விட்டு பயமுறுத்தி வருகிறது. இதற்கு முன்னரே ஜப்பானை நோக்கி வடகொரிய ராணுவம் ஏவுகணை வீசியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே பலமுறை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது.
ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட ஏவுகணை ஏவலால் ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள் மீண்டும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனை செய்துள்ளது வட கொரியா. வடகொரியா செலுத்திய அந்த ஏவுகணை ஜப்பான் நாட்டின் கடற்கரை பகுதிக்கு அருகே சென்று விழுந்ததாக அந்நாட்டு ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த பகுதியில் இருந்து சோதனை நடத்தப்பட்டது என்பது தொடர்பான எந்த விதமான உறுதி செய்யப்பட்ட தகவல்களும் வெளியாகவில்லை.
கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி வடகொரியா ஏவுகணை சோதனை செய்திருந்தது. இந்த ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள ஜப்பான் ராணுவம், இதனால் தங்கள் நாட்டின் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அறிவித்துள்ளது.