கரோனா தடுப்பு நடவடிக்கையில் சீனாவுக்கு அண்டை நாடான தைவான் பின்பற்றும் நடைமுறை பல்வேறு நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைக் கடந்துள்ள சூழலில், இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 24,000 ஐ கடந்துள்ளது. இந்த வைரசின் பரவலைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் மிகவும் சிறிய மற்றும் மக்கள்தொகை குறைந்த நாடான தைவான், தங்கள் நாட்டு மக்களை வீட்டிலேயே தங்கவைக்க பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி கரோனா அறிகுறிகளுடன் உள்ளவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், கரோனா அறிகுறி உள்ளவர்கள் இருப்பிடம் குறித்த தரவுகள் ஆன்லைன் வழியாகக் கண்காணிக்கப்படுகின்றன. ஒருவேளை கண்காணிப்பில் உள்ளவர் தனது இருப்பிடத்தை விட்டு வெளியே சென்றால் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள அதிகாரிகளுக்கு உடனடியாக மொபைல் வழியாகத் தகவல் அனுப்பப்படும். உடனடியாக கண்காணிப்பில் உள்ளவரின் இருப்பிடத்தை அதிகாரிகள் சோதனை செய்வர். கண்காணிப்பில் உள்ள நபர் ஒருவேளை வீட்டில் இல்லை என்றால் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் 24 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவர்.
அதேநேரம் மக்களை வீட்டிற்குள்ளேயே வைத்திருப்பதற்கும் அந்நாடு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. விதிகளைப் பின்பற்றி வீட்டிலேயே இருப்பவர்களுக்குப் பரிசாகப் பணம், நொறுக்குத்தீனி, நூடுல்ஸ், இணையதளத்தில் இலவசமாகப் படம் பார்க்கும் வசதி, இலவசமாக கேம்கள் விளையாடும் வசதி ஆகியவையும் ஏற்பாடு செய்துதரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அந்நாட்டில் நல்ல பலனையும் கொடுத்துள்ளது என்கின்றனர். சீனாவின் அண்டை நாடான தைவானில் இதுவரை 267 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.