புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா நேற்று பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனை தொடர்ந்து நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் இன்று காலை இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்திய எல்லைக்குள் புகுந்த இரண்டு பாகிஸ்தான் விமானங்கள் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகவும், பின்னர் இந்திய ராணுவ நடவடிக்கையால் அவை திரும்ப சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் இந்திய வான்படையை சேர்ந்த என்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குளாகி அதில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த எப் 16 ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் பயணம் செய்த விமானி பார்ச்சூட் உதவியுடன் குதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் வான் பகுதியில் பறப்பதை சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தியுள்ளன. இரு நாடுகளுக்கு இடையே போர் பதட்டம் நிலவுவதால் இந்த வழித்தடத்தில் பயணிப்பதில் பாதுகாப்பற்ற தண்மை உள்ளதால் அனைத்து சர்வதேச விமானங்களும் வேறு வழித்தடங்களில் மாற்றிவிடப்பட்டுள்ளன. அமிர்தசரஸ், ஜம்மு காஷ்மீரை தொடர்ந்து டெஹ்ராடூன், மற்றும் சத்தீஸ்கர் விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.