கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக சுவிட்சர்லாந்தின் மேட்டர்ஹார்ன் மலைச் சிகரத்தில் சுமார் 1000 மீட்டர் அளவிலான பிரம்மாண்ட இந்தியத் தேசியக்கொடி ஒளிரவிடப்பட்டது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வைரஸ் காரணமாக 14,000-க்கும் பாதிக்கப்பட்டு, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1900 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கரோனாவால் முடங்கியுள்ள நிலையில், தங்கள் நாட்டு மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக சுவிட்சர்லாந்து அரசு பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்தின் ஜெர்மாட் பகுதியில் உள்ள மேட்டர்ஹார்ன் மலைச்சிகரத்தில் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமான பல்வேறு கருத்துகளைத் தொழில்நுட்ப உதவியுடன் ஒளிரவிட்டு வருகிறது அந்நாட்டு அரசு. அந்த வகையில் அனைத்து உலக நாடுகளுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, நேற்று அம்மலைச் சிகரத்தில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளின் தேசியக்கொடிகள் ஒளிரவிடப்பட்டன.
இந்தப் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்தியப் பிரதமர் மோடி, "கரோனாவுக்கு எதிராக உலகம் ஒற்றுமையுடன் போராடுகிறது. இந்தத் தொற்றுநோயை மனிதநேயம் நிச்சயமாக வெல்லும்" எனத் தெரிவித்துள்ளார்.