Skip to main content

“பல்வேறு திட்டங்கள் தமிழகத்திற்கு வருவற்கு காரணமாக இருந்தவர்” - முதல்வர் பேட்டி!

Published on 27/12/2024 | Edited on 27/12/2024
CM Interview He was the reason for various projects to come to TN

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு (வயது 92) உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று (26.12.2024) மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்சினையால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு  அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், டெல்லியில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.12.2024) நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதோடு, மன்மோகன் சிங் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.  அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதிமாறன், ஆ. ராசா, திருச்சி சிவா மற்றும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர்  உடன் இருந்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “பொருளாதார நிபுணர், முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் இழப்பானது காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மட்டுமல்ல, இந்திய நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பாகும். குறிப்பாக தமிழ்நாட்டினுடைய உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும், பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தருவதற்கும் துணை நின்றிருக்கிறார்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டமாக இருந்தாலும், தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையிலே சாலை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதாக இருந்தாலும் சரி, அதேபோல் 100 நாட்கள் வேலைத்திட்டம் என்கின்ற ஒரு புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவர் மன்மோகன் சிங். எல்லாவற்றையும் தாண்டி, தமிழர்களுடைய பல ஆண்டு கால கனவாக இருந்து வந்த தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை சோனியா காந்தியின் துணையோடு அறிவித்து நிறைவேற்றித் தந்தவர் மன்மோகன்சிங். கலைஞரோடு நெருங்கி நட்புணர்வோடு பழகக்கூடியவராக இருந்தவர். அவர் மறைந்துவிட்டார் என்பது வேதனைக்குரிய ஒன்று. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், திமுக சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்போது செய்தியாளர் ஒருவர் பத்து ஆண்டுகள் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது திமுக அந்த கூட்டணியில் இருந்தது. தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நன்மையாக இருந்தது?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இன்றைக்கு மெட்ரோ ரயில் திட்டம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் அவர் தான். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்ததற்கும் அவர் தான் காரணம். அதேபோல், சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வருவதற்கும் அவர் தான் காரணமாக இருந்தார். ஆனால் இடையிலே அத்திட்டம் நின்றுவிட்டது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருவற்கு அவர் தான் காரணமாக இருந்திருக்கிறார்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்