உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை தன்வசப்படுத்திக் கொண்டார். ட்விட்டரை வாங்கியதும் அதில் ஏராளமான மாற்றத்தைச் செய்த எலான் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உட்பட ஏராளமான ஊழியர்களை வேலையிலிருந்து அதிரடியாக நீக்கினார்.
இதனைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஒ) தான் இருக்க வேண்டுமா அல்ல விலக வேண்டுமா என்ற ஒரு வாக்கெடுப்பினை ட்விட்டரில் நடத்தியிருந்தார். அதில் 57 சதவிகிதம் பேர் எலான் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலக வேண்டும் என வாக்களித்திருந்தனர். இதையடுத்து எலான் மஸ்க், “இந்தப் பதவிக்கேற்ற ஒரு முட்டாளைக் கண்டறிந்த பின், தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து நான் விலகிக் கொள்வேன். அதன் பின்பு மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களுக்கு மட்டுமே தலைமை வகிப்பேன்” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவி ஒரு நாய்க்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சி.இ.ஓ ஒன்று அச்சிடப்பட்டுள்ள டி- சர்ட்டுடன் அந்த நாய் கண்ணாடி அணிந்து தன் முன்பு ஆவணங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அது அவரது வளர்ப்பு வளர்ப்பு நாய் ஃப்ளோக்கி என்று கூறப்படுகிறது.