குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.
இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.
இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார் என்பதற்கான தேர்தல், அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டது. அதில், ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்கு செல்வாக்கு பெரும் நபர் தான், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அந்த வகையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, அந்த கட்சியைச் சேர்ந்தவரான நிக்கி ஹாலே போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது.
இதனையடுத்து, கடந்த 3 ஆம் தேதியும் 5 ஆம் தேதியும் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, நிக்கி ஹாலே போட்டியில் இருந்து விலகினார். இதன் மூலம் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் நியமிக்கப்பட்டார். அதேபோல், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், அமெரிக்காவின் ஓஹியோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டொனால்ட் டிரம்ப், “என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் அமெரிக்கா மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். மெக்சிகோவில் கார்களை உருவாக்கி அமெரிக்கர்களுக்கு விற்கும் சீன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் அதிபரானால், கார்களை அமெரிக்காவில் விற்க முடியாது. இந்த முறை நான் அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால், ஜோ பைடனால் நாட்டில் வன்முறை வெடிக்கும். இதனால், மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும்” என்று கூறினார்.