தனது பாஸ்வேர்ட்களை சேமித்து வைத்திருக்கும் ஹார்ட் டிஸ்க்கின் பாஸ்வேர்ட் மறந்துபோனதால், தனது பிட்காயின் கணக்கில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாயை பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்துவருகிறார் இளைஞர் ஒருவர்.
ஜெர்மனியைச் சேர்ந்த புரோகிராமர் ஸ்டீபன் தாமஸ். சான் பிரான்சிஸ்கோவில் வசித்துவரும் இவர் பிட்காயின்களில் முதலீடு செய்பவர் ஆவார். பல ஆண்டுகளுக்கு முன்னர் பிட்காயின்களின் மதிப்பு அவ்வளவாக அதிகமாக இல்லாத காலத்தில், இவருக்கு ஒரு போட்டியில் 7002 பிட்காயின்கள் பரிசாக கிடைத்துள்ளன. அந்த பிட்காயின்கள் அடங்கிய டிஜிட்டல் வாலெட்டின் பாஸ்வேர்டை, அயர்ன் கீ என அழைக்கப்படும் ஒருவகை ஹார்ட் டிஸ்க்கில் தாமஸ் சேமித்து வைத்துள்ளார். அதேபோல அந்த அயர்ன் கீயின் பாஸ்வேர்டை ஒரு காகிதத்தில் எழுதிவைத்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர் வைத்திருந்த பிட்காயின்களின் மதிப்பு ஏகத்திற்கு உயர்ந்ததால், அவற்றைப் பரிவர்த்தனை செய்து பணம் ஈட்ட அவர் நினைத்துள்ளார். அவர் வைத்திருக்கும் பிட்காயின்களின் இன்றைய மதிப்பு சுமார் 1715 கோடி ரூபாய் ஆகும்.
ஆனால், இந்த பிட்காயின்கள் அடங்கிய டிஜிட்டல் வாலெட்டின் பாஸ்வேர்டை சேமித்து வைத்திருந்த அயர்ன் கீயின் பாஸ்வேர்டை அவர் மறந்துவிட்டார். அவர் அதனை எழுதிவைத்திருந்த காகிதமும் தொலைந்துவிட்டது. இதனால், என்ன செய்வதென்று தெரியாத அவர், இதுவரை எட்டு முறை அந்த அயர்ன் கீயின் பாஸ்வேர்டை போட்டு பார்த்துள்ளார். ஆனால், அவை அனைத்துமே தவறானது என வந்துள்ளது. அயர்ன் கீயின் பாஸ்வேர்டை பத்து முறை தவறாக போட்டால், அதில் உள்ள தகவல்களை மீண்டும் பெற முடியாது. இந்த நிலையில், இன்னும் இரண்டு முறை மட்டுமே பாஸ்வேர்டை போட்டு அயர்ன் கீயை திறக்க முடியும் என்ற சூழலில், அவ்வாறு அதனை திறந்தால் மட்டுமே தனது பிட்காயின்கள் அடங்கிய டிஜிட்டல் வாலெட்டினை திறக்கமுடியும் என்று நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் அந்த இளைஞர்.
எட்டு முறை தவறான பாஸ்வேர்டை போட்டுள்ள, தாமஸ் இன்னும் இரண்டு முறைக்குள் தனது பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள தாமஸ், "நான் படுக்கையில் படுத்துக்கொண்டு பாஸ்வேர்டை பற்றி யோசிப்பேன். பின்னர் நான் சில புதிய உத்திகளுடன் கணினிக்குச் செல்வேன். ஆனால், அது வேலை செய்யாது, நான் மீண்டும் யோசிக்க ஆரம்பிப்பேன்" என நம்பிக்கை தெரிவிக்கிறார். பாஸ்வேர்டை மறந்ததால் சுமார் 1700 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின்களைப் பரிவர்த்தனை செய்யமுடியாமல் தவிக்கும் இந்த இளைஞரின் கதை இணையத்தில் பலரையும் அனுதாபப்பட வைத்துள்ளது.