கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000 ஐ கடந்துள்ளது.
சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து, ஈரான், அமெரிக்கா என பல உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 60 நாடுகளில் இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ள சூழலில், உலக நாடுகள் பலவும் இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வைரஸ் தோற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கை 3,000த்தை கடந்துள்ளது. இதில் சீனாவில் மட்டும் கரோனா பலி எண்ணிக்கை 2912 ஆக பதிவாகியுள்ளது. தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.