சீனாவின் டலியன் நகரில் இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த கடல் உணவு பார்சலில் கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இன்று உலகமும் முழுவதையும் புரட்டிப் போட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்களைத் தாக்கியுள்ள இந்த வைரஸ், மனிதர்களின் நுரையீரலைத் தாக்கி சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடியதாகும். நீண்ட நாட்கள் காத்திருப்பிற்குப் பின்னர் முதன்முறையாக இந்த வைரஸுக்கான தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டறிந்துள்ளது. இந்நிலையில் சீனாவின் டலியன் நகரில் இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த கடல் உணவு பார்சலில் கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் துறைமுக நகரமான டலியனில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இறக்குமதி செய்யப்பட்ட கடல் உணவு பார்சல்களின் மேற்பகுதியில் கரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யந்தாய் நகரில் உள்ள 3 நிறுவனங்களில் உள்ள பார்சல்களின் வெளிப்புறத்தில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஆனால், இந்த உணவு பார்சல்கள் கடல்வழியாக டலியனில் இறங்கியுள்ளதால், எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.