கடந்த ஆண்டின் இறுதில் சீனாவின் உகான் நகரத்தில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உலக நாடுகளை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் தடுப்பூசி ஆய்வினை சீரம் நிறுவனம், அஸ்ட்ராஜெனெகா மற்றும் நோவாவாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செய்து வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "குறைந்த கால அளவில் உலக மக்களுக்கு தடுப்பூசி போடும் அளவிற்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லை. ஒருவருக்கு இரண்டு டோஸ் அளிக்க வேண்டும் என்றால் உலக அளவில் 1,500 கோடி டோஸ் வரை தேவைப்படும். தடுப்பூசி உற்பத்தி வேகத்தை விட பரவலின் வேகம் அதிகமாக உள்ளது. இதே வேகத்தில் சென்றால் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க குறைந்தது நான்கு ஆண்டுகள் ஆகும். அனைவரும் தடுப்பூசியை எதிர்பார்த்து உள்ளனர். இதுவரை மொத்தம் 35 தடுப்பூசிகள் சோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளன" என்றார்.