அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை படைத்த கிறிஸ்டினா கோச் இன்று மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளார்.
அமெரிக்கா, ரஷ்யா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் அமைத்துள்ள சர்வதேச ஆய்வு மையத்தில் 6 வீரர்கள் தங்கியிருந்து தொடர்ந்து ஆராய்ச்சி வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தோராயமாக ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் மூன்று பேர் பூமிக்கு திரும்புவர், பின்னர் அதற்கு பதிலாக புதிதாக மூவர் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்படுவர்.
அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா கோச் என்ற விண்வெளி வீராங்கனை கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். தொடர்ந்து 10 மாதங்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த அவர் இன்று பூமி திரும்பியுள்ளார். கஜகஸ்தானில் விண்வெளி ஓடம் மூலம் அவர் தரை இறங்கியுள்ளார். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 328 நாட்கள் தங்கியிருந்து, அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.