இந்தியா - சீனா இடையே கடந்த ஆண்டு எல்லையில் மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் முற்றிலுமாக தணிவதற்குள், இந்தியாவிற்கு கவலை அளிக்கும் திட்டத்திற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
சீனாவில் நேற்று (11.03.2021) கூடிய அந்தநாட்டின் பாராளுமன்றம் 14வது ஐந்து ஆண்டு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள இந்த ஐந்தாண்டு திட்டத்தில் பிரம்மபுத்ரா நீர்மின் திட்டமும் இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த சீனா, அருணாச்சலப் பிரதேசத்தின் அருகே மிகப்பெரிய அணை ஒன்றைக் கட்டவுள்ளது.
இந்தத் திட்டத்தால் பிரம்மபுத்ரா நதி மூலம் பயனடையும் இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு பாதிப்பு ஏற்படும் என நம்பப்படுகிறது. இந்தத் திட்டம் முதன்முதலாக அறிவிக்கப்பட்டபோதே இந்தியா தனது கவலையை சீனாவிடம் வெளிப்படுத்தியது. மேலும் நதியின் மேற்பகுதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், நதியின் கீழ் பகுதியில் உள்ள நாடுகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது எனவும் இந்தியா சீனாவை வலியுறுத்தியது.
இருப்பினும் இந்தத் திட்டத்தால் பாதிப்பு ஏற்படாது என்று கூறிய சீனா, தெற்காசிய நாடுகளின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படும் எனக் கூறியிருந்தது. இந்தநிலையில் இந்தத் திட்டத்திற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.