தமிழக கடலோர பகுதிகளை உஷார்படுத்த மாநில காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு,பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஞாயிறன்று கொழும்பு காலி முகத்திடலில் போராட்டக்காரர்களுக்கும் அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான வன்முறை மூண்டது. இந்தச் சூழலில், பிரதமர் பதவியிலிருந்து தான் விலகுவதாக மகிந்த ராஜபக்ஷே அறிவித்தார்.
இந்தப் பொருளாதார நெருக்கடியால் அவதிக்குள்ளாகியுள்ள இலங்கைத் தமிழர்கள் தொடர்ச்சியாக தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், தமிழக கடலோர பகுதிகளை உஷார்படுத்த மாநில காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் இலங்கை சிறையில் இருந்து தப்பிய 58 சிறைக்கைதிகள் கடல் மார்க்கமாக தமிழகம் வந்தடைய வாய்ப்புள்ளதால் இந்த எச்சரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் விடுத்துள்ளது. அதேபோல, இந்தச் சூழலை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் அமைப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்துபவர்கள் உள்ளே நுழைய வாய்ப்புள்ளதாகவும் மத்திய உள்துறை எச்சரித்துள்ளது.
மத்திய உள்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழக கடலோர பகுதிகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.