துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது உலகம் முழுவதும் உள்ள மக்களை கடும் பீதியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியில் கடந்த 6 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் காஸியண்டெப் நகரில் 7.8 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் எல்பிஸ்டான் பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டன.
நிலநடுக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சரிந்ததால் குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மூன்று நாட்களுக்கும் மேல் ஆனதால் இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிருடன் மீட்பது கடினமான விஷயம் என மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். துருக்கியில் கடந்த 1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17,500 பேர் பலியான நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கப் பாதிப்பில் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் கடந்துள்ளது.