பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு பின்பு நேற்று (04.07.2024) நடைபெற்றது. மொத்தம் 650 மக்களவை இடங்கள் இருக்கும் நிலையில் பெரும்பான்மை வெற்றி பெற 326 தொகுதிகள் வேண்டும் என்ற நிலை உள்ளது. இத்தகைய சூழலில் இன்று (05.07.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 412 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேநேரம் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 121 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்துள்ளது.
இதனால் பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக்கின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த பெரும் பின்னடைவு அக்கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதற்கிடையே பிரதமராக புதிதாக பதவியேற்க உள்ள கெய்ர் ஸ்டார்மருக்கு ரிஷி சுனர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதற்கிடையே பிரிட்டனின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மரை அதிகாரப்பூர்வமாக மன்னரின் மாளிகை அறிவித்துள்ளது. இதன் மூலம் தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அறிவிப்பில் பிரதமராகப் பதவியேற்க வருமாறு ஸ்டார்மருக்கு மன்னர் 3ஆம் சார்லஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்க உள்ள கெய்ர் ஸ்டார்மர் தனது முதல் உரையை ஆற்றினார். அதில், “மாற்றத்திற்கான பணி உடனடியாகத் தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை, நாங்கள் பிரிட்டனை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்பதில் சந்தேகமில்லை. புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும். மாற்றத்திற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே மக்களின் அந்த நம்பிக்கைக்கு ஏற்ப பிரிட்டன் மீண்டு வரும். ஆட்சி அமைக்குமாறு மன்னர் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டேன். நாம் ஒற்றுமையாக சேர்ந்து முன்னேற வேண்டும். எனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து சேவை செய்வேன்” எனத் தெரிவித்தார்.