கரோனா வைரஸ் உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகில் வளர்ந்த நாடுகளே இந்த வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணறி வருகின்றன. இதுவரை இந்த நோய் தொற்றுக்கு முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால், கரோனா பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி சமூக விலகல் மட்டுமே என்பதால், இந்தியா உட்பட பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. இருந்த போதிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்த வைரஸ் தொற்றால் மிக அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகளை சந்தித்த நாடு இத்தாலி எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அமெரிக்கா அதை தற்போது முறியடித்துள்ளது. அமெரிக்காவில் இன்று ஒரே நாளில் 919 பேர் உயிரிழந்ததன் மூலம் மொத்த எண்ணிக்கை 19,666 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாலியில் 1.45 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,849 ஆக உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.