திருமணமாகி 51 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த கணவன் மனைவி இருவரும் மரணத்திலும் இணைபிரியாது அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால், சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74,000-ஐ கடந்துள்ளது. மேலும், 2,86,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்த வைரசால் அதிகம் பாதிப்படைந்துள்ள அமெரிக்காவில், இதுவரை 3.67 லட்சம் பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அதில் 10,900 பேர் உயிரிழந்துள்ளனர், 19,000 பேர் குணமடைந்துள்ளனர்.இந்நிலையில், திருமணமாகி 51 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த கணவன் மனைவி இருவரும் மரணத்திலும் இணைபிரியாது அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த தம்பதி ஸ்டூவர்ட் பேக்கர் (74) மற்றும் அட்ரியன் பேக்கர் (72). கணவன் மனைவியான இவர்கள் கடந்த 51 ஆண்டுகளாக இணைபிரியாத சிறந்த தம்பதியாக அவர்களின் உறவினர்கள் வட்டத்தில் அறியப்பட்டவர்கள். கடந்த மார்ச் மாத மத்தியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்டூவர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர், அவரது மனைவியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனைகளின் முடிவில் அட்ரியனுக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்,கடந்த வாரம் இருவருமே அடுத்தடுத்து உயிரிழந்தனர்.ஆறு நிமிட இடைவெளியில் கணவன் மனைவி இருவர் ஒரே அறையில் தங்களது உயிரினை விட்டுள்ளனர்.
இந்த நிகழ்வு குறித்து பேசியுள்ள ஸ்டூவர்ட்- அட்ரியன் தம்பதியின் மகனான பட்டி பேக்கர், "மக்கள் தொற்றுநோயைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.அடிக்கடி கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். வீட்டிலேயே இருக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.