
பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. இதற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்தன. அதே சமயம் இந்த பொதுத் தேர்வை எழுதிய அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார்ப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எனப் பலரும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று (16.05.2025) காலை 9 மணிக்கு வெளியாகியுள்ளது.
அதன்படி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத்தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்பட்டது. அதில் தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 71 ஆயிரத்து 239 ஆகும். மாணவியர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 119, மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 36 ஆயிரத்து 120 பேர் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 8 லட்சத்து 17 ஆயிரத்து 261 ஆவர்.
அதாவது மொத்த தேர்ச்சி விகிதம் 93.80% ஆகும். அதன்படி மாணவியர் 4 லட்சத்து 17 ஆயிரத்து 183 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் 95.88% ஆகும். மாணவர்கள் 4 லட்சத்து 78 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.74% ஆகும். அந்த வகையில் மாணவர்களை விட 4.14 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக சதவிகித தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள் வரிசையில் 98.31% பெற்று சிவகங்கை மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் 97.45% உடன் 2ஆம் இடத்தையும், தூத்துக்குடி மாவட்டம் 96.76% உடன் 3ஆம் இடத்தையும், கன்னியாகுமரி மாவட்டம் 96.66% உடன் 4ஆம் இடத்தையும், திருச்சி மாவட்டம் 96.61% உடன் 5ஆம் இடத்தையும் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.