பிரேசில் நாட்டின் அதிபாராக 2019ஆம் ஆண்டிலிருந்து பதவி வகித்துவருபவர் ஜெய்ர் போல்சனாரோ. தீவிர வலதுசாரியான இவர், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வலதுசாரி கருத்தியலைக் கொண்ட சோசியல் லிபரல் கட்சியில் இணைந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பிறகு கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோசியல் லிபரல் கட்சியிலிருந்து வெளியேறிய அவர், இரண்டு ஆண்டுகளாக எந்தக் கட்சியிலும் சேராமல் இருந்துவந்தார்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு, போல்சனாரோ மையவாத கருத்தியல் கொண்ட லிபரல் கட்சியில் சேரவுள்ளார். போல்சனாரோவுக்கும் லிபரல் கட்சித் தலைவர் வால்டெமர் கோஸ்டா நெட்டோவுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில் இதுதொடர்பான ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிரேசில் அதிபர் தேர்தலில் போல்சனாரோவை எதிர்த்து, இடதுசாரியான முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா போட்டியிடும் நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா முன்னிலை வகிக்கிறார். இதன் காரணமாக மீண்டும் அதிபர் பதவியைக் கைப்பற்றும் நோக்கத்தோடு போல்சனாரோ லிபரல் கட்சியில் இணைவதாகக் கூறப்படுகிறது.