கனடாவில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், லிபரல் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது, ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமர் ஆனார். ஆனால் அதேநேரத்தில் முக்கியமான சட்டங்களையெல்லாம் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடனே நிறைவேற்றும் நிலை லிபரல் கட்சிக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து ஜஸ்டின் ட்ரூடோ, ஆட்சியைக் கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலைச் சந்தித்தார். இந்தத் தேர்தலிலும் லிபரல் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் லிபரல் கட்சி மீண்டும் கூட்டணி அமைத்தது. இதனையடுத்து ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாகப் பதவியேற்றார். அவரது தலைமையில் அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது.
இந்தநிலையில், தற்போது ஜஸ்டின் ட்ரூடோ தனது அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ளார். அதன்படி அனிதா ஆனந்த் என்ற நாடாளுமன்ற உறுப்பினரை ஜஸ்டின் ட்ரூடோ பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமித்துள்ளார். கார்ப்பரேட் வழக்கறிஞரான அனிதா ஆனந்த், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். அனிதா ஆனந்தின் தந்தை தமிழ்நாட்டையும், தாய் பஞ்சாபையும் சேர்ந்தவர்கள்.
பாதுகாப்புத்துறை அமைச்சராவதற்கு முன்பு அனிதா ஆனந்த், பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராகப் பணியாற்றினார். மேலும், இந்தியாவிலிருந்து கனடாவிற்கு கரோனா தடுப்பூசிகளைப் பெறுவதில் முக்கியப் பங்காற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.