தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இந்த நவீன காலகட்டத்தில் சிறு சிறு விஷயங்களை கூட மனித உழைப்பை குறைத்து தொழில்நுட்பத்தை வைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உலகெங்கும் பெருகி வருகிறது. அந்த வகையில் அண்மையாக வீட்டு வேலைகளை செய்வதற்காக ரோபோக்கள் உருவாக்கப்பட்டது. சமீபத்தில் ஹோட்டலில் சர்வர்களுக்கு பதிலாக ரோபோக்கள் உணவை பரிமாறும் வீடியோ காட்சிகளும் வெளியாகியது.
இந்நிலையில் அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் காபி, டீ உள்ளிட்ட பானங்களை ரோபோ ஒன்று தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. நெவாடா மாகாணம் பேரடைஸ் நகரை சேர்ந்த 'ரிச் டேக் ரோபாட்டிக்ஸ்' என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பிரத்தியேக ரோபோ டீக்கடைக்காரரைப் போல ஒரு கோப்பையை எடுத்து நன்கு தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு, மனிதர்களைப் போலவே காபி, டீ ஆகியற்றை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது. காபி மட்டுமல்லாது ஐஸ் டீ, காக்டெயில் மது உள்ளிட்ட பானங்களையும் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
இந்த ரோபோவிற்கு ஆடம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் குவிந்து கொண்டு ரோபோ ஆடம்மிடம் டீ, காபி ஆர்டர் செய்து வாங்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.