ஊரடங்கை மீறி பொது வெளியில் தொந்தரவு ஏற்படுத்தி போலீசாரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயலும் மக்களைச் சுட்டுக்கொல்ல அறிவுறுத்தியுள்ளார் பிலிப்பைன்ஸ் அதிபர்.
உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.9 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், 47,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1998 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கட்டுப்பாடுகளை மீறி பொது வெளியில் தொந்தரவு ஏற்படுத்தி போலீசாரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயலும் மக்களைச் சுட்டுக்கொல்ல அந்நாட்டுப் போலீசை அறிவுறுத்தியுள்ளார் பிலிப்பைன்ஸ் அதிபர்.
இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய அவர், "நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. எனவே பிரச்சனையின் தீவிரத்தன்மை குறித்து நான் கூறுவதை நீங்கள் கேட்க வேண்டும். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் சுகாதாரத் துறையைக் காப்பாற்றவும் அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து அனைவரும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளைப் பின்பற்றுவது மிக முக்கியமானது. அடுத்ததாக நாட்டின் ராணுவத்தினருக்கு, காவல்துறையினருக்கும் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். கட்டுப்பாடுகளை மீறி யாராவது பொது வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டாலோ, மற்றவர்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தி போலீசாரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்றாலோ அவர்களைச் சுட்டுக்கொல்லுங்கள். நான் சொல்வது புரிகிறதா..? உயிரை எடுத்துவிடுங்கள்" எனத் தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸில் 2000க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 96 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பிலிப்பைன்சின் மணிலாவில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில் அந்நாட்டு அதிபர் இப்படியொரு உரையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.