Skip to main content

'எரிய வேண்டியது அடுப்பா? மக்களின் வயிறா?; சாடிஸ்ட் பாஜக அரசே'- மு.க.ஸ்டாலின் கண்டனம்   

Published on 08/04/2025 | Edited on 08/04/2025
nn

நாடு முழுவதும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையானது உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி வீட்டுக்கு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்ந்துள்ளது. இதனால் மானிய விலை சிலிண்டர் 853 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயிலிருந்து 550 ரூபாயாக உயர்ந்துள்ளது. நள்ளிரவு முதல் இந்த விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளது.

அண்மையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்திருந்த நிலையில் தற்போது வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையானது உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், விலையேற்றத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? "உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்" என்பது, சாடிஸ்ட் பாஜக அரசுக்கு மிகவும் பொருந்தும்!

dmk

உலக அளவில் க்ரூட் ஆயில் விலை சரிந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!? வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் கேஸ் சிலிண்டர்  விலை உயர்வு அமைந்திருக்கிறது.

மக்களே… அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது! ஒன்றிய பாஜக அரசே... தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக!' என தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்