Skip to main content

"ட்ரம்பை பார்க்க நன்றாக இருக்கிறது" - க்ரெட்டா தன்பெர்க் பதிவு!

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

trump

 

உலகநாடுகள் பங்குபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் 74வது பொதுக்கூட்டத்தில் ட்ரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களைக் கடுமையாக விமர்சித்து இணைய உலகில் பிரபலமானவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியான க்ரெட்டா தன்பெர்க். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி ஸ்வீடன் நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தி, உலக மக்களின் கவனத்தை பெற்றார் க்ரெட்டா. அதன்பின்னர் ஐ.நா.வில் இவரின் உரையும் உலக அளவில் பெரும் ஆதரவைப் பெற்றது. அதன்பின் க்ரெட்டா மற்றும் ட்ரம்ப் இடையே அவ்வப்போது வார்தை மோதல் நடந்து வந்தது. 

 

இந்நிலையில் மகிழ்ச்சியான மனிதராக தெரியும் ட்ரம்பைப் பார்ப்பதற்கு நன்றாக இருப்பதாக க்ரெட்டா, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் விமானத்தில் ஏறும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள அவர், "ட்ரம்பை பார்க்கும்போது, மகிழ்ச்சியான மூத்தவர் ஒருவர், பிரகாசமான, அருமையான எதிர்காலத்தை நோக்கி காத்திருப்பது போல் உள்ளது. இதனைப் பார்க்க நன்றாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

 

‘டைம்ஸ்’ இதழின் 2019ம் ஆண்டுக்கான சிறந்த நபராக க்ரெட்டா தன்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப், "மிகவும் அபத்தமானது. க்ரெட்டா தனது கோப மேலாண்மை பிரச்சனைக்குத் தீர்வு கண்டறிய வேண்டும். இல்லையென்றால் நண்பருடன் ஒரு நல்ல பழைய திரைப்படத்திற்குச் செல்லுங்கள்! சில் க்ரெட்டா, சில்!" எனத் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலடியாக அமெரிக்க வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாக ட்ரம்ப் பதிவிட்டபோது, "மிகவும் அபத்தமானது. ட்ரம்ப் தனது கோப மேலாண்மை பிரச்சனைக்குத் தீர்வு கண்டறிய வேண்டும். இல்லையென்றால் நண்பருடன் ஒரு நல்ல பழைய திரைப்படத்திற்குச் செல்லுங்கள்! சில் டொனால்ட், சில்!" என க்ரெட்டா கூறியது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்