புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு காவல் சரகம் கட்ராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமன் மகள் சுந்தரி (21). இவர் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்ததால் அவரது குடும்பத்தினர் சுந்தரியை கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த சுந்தரி, வீட்டிலிருந்து சற்று தூரத்தில் உள்ள பழைய கல் கட்டிய அரசாங்க கிணற்றில் குதித்துள்ளார்.
இதனைப் பார்த்த சுந்தரியின் பெரியப்பா அர்ச்சுனன் மகன் முத்துக்காளை (எ) முத்துக்குமார் (29) தங்கையைக் காப்பாற்ற வேகமாகக் கிணற்றுக்குள் குதித்துவிட்டார். ஏற்கனவே கிணற்றில் குதித்த சுந்தரி ஒரு கல்லைப் பிடித்துக் கொண்டு நின்ற நிலையில் முத்துக்குமார் தண்ணீரில் மூழ்கி ஒரு முறை வெளியே வந்து மீண்டும் மூழ்கியவர் வெளியே வரவில்லை.
சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கிணற்றுக்குள் கல்லைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்த சுந்தரியை கயிறு மூலம் மீட்டு வெளியே கொண்டு வந்தவர்கள், தொடர்ந்து முத்துக்குமாரை தேடியும் கிடைக்கவில்லை. சம்பவம் குறித்து உறவினர்கள் வடகாடு காவல் நிலையத்திற்கும், ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இறங்கியும், பாதாளக் கரண்டியைக் கிணற்றுக்குள் இறக்கியும் தேடிய நிலையில், முத்துக்குமார் சட்டையில் கோர்த்து சடலமாக மேலே தூக்கப்பட்டார். சடலத்தைக் கைப்பற்றிய வடகாடு போலீசார் முத்துக்குமார் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தங்கையின் உயிரைக் காப்பாற்றப் போய் அண்ணன் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.