ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கவுந்தப்பாடி அருகே உள்ள சூரநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு சதீஸ் குமார்(34), நகுலன் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் குப்புசாமி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சதீஸ் குமார் மரம் அறுக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நகுலன் பவானி அருகே உள்ள காடையாம்பட்டியில் சாய தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அண்ணன் - தம்பி இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. சதீஸ் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் மது போதையில் கிராமத்தில் உள்ள பலரிடமும் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு, சதீஸ் குமார் குடிபோதையில் அதே பகுதியை சேர்ந்த இருவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதை பார்த்த அவரது தம்பி நகுலன் அண்ணன் சதீஸ் குமாரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்ற பின்பு சதீஸ் குமார் அங்கு இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு அவரிடம் தகராறு செய்த இருவரை வெட்டிக் கொலை செய்யப் போவதாகக் கிளம்பி உள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த அவரது தாயான மகாலட்சுமி சதீஸ் குமாரை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த சதீஸ் குமார் அவரிடமும் தகராறு செய்து மகாலட்சுமியை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அதை பார்த்த நகுலன் அண்ணன் சதீஸ் குமாரை தடுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சதீஸ் குமார் கீழே விழவே, அவர் வைத்திருந்த அரிவாளை பிடுங்கிய நகுலன் ஆத்திரத்தில் சதீஸ் குமாரை கழுத்தில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே சதீஸ் குமார் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கவுந்தப்பாடி போலீசார் சதீஸ் குமார் வீட்டுக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து நகுலனை கைது செய்தனர். குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை தம்பியே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.