சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் முகமது யூனஸ் (32). இவர் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்துவருகிறார். தனது பணிக்காக அலுவலகம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது சென்னை பெசண்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடபழனி நோக்கி செல்லும் 5இ என்ற தடம் கொண்ட மாநகரப் பேருந்து சைதாப்பேட்டை சின்னமலை வழியாக சென்றுகொண்டிருந்தது.
அப்போது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த முகமது, பேருந்தின் பக்கவாட்டில் மோதியுள்ளார். அதில் கீழே விழுந்ததில் முகமது மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியது. அதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் முகமது இறந்துவிட்டார். பின்னர் கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று முகமது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், சாலையில் இருந்த பள்ளத்தின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் விபத்துக்குக் காரணமான அந்தப் பள்ளம் கற்களைக் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பல முக்கிய சாலைகளில் ஆங்காங்கே இதுபோன்ற பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழை நேரத்தில் வேகமாக செல்லாமல், வாகன ஓட்டிகள் பள்ளங்களைக் கண்டறிந்து கவனமாக செல்ல வேண்டும் என காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.