Skip to main content

மூதாட்டியை துடிக்க துடிக்க கொன்ற இளைஞர்; விசாரணையில் பகீர்!

Published on 19/08/2024 | Edited on 19/08/2024
young man incident an old woman over an interest issue

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ளது சாலைப்புதூர். இங்கிருக்கும் சுங்கச்சாவடி அருகே கரிசல் குளம் காட்டுப்பகுதியில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி அடையாளம் காண முடியாத படி எரிக்கப்பட்டு அழுகிய நிலையில் ஒரு மூதாட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலின் அருகே தீயிட்டு எரிக்கப்பட்ட மூதாட்டியின் உடைகள் துண்டு துண்டாகக் கிடந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து கயத்தாறு காவல் நிலைய போலீஸார்  தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அதில், கொடூரமாக இறந்து கிடந்தது விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள படர்ந்தாலைச் சேர்ந்த 71 வயதான காந்திமதி  என்பது தெரிய வந்தது. அத்துடன்,  ஏற்கெனவே உயிரிழந்த காந்திமதியின் மகன், தன் தாயைக் காணவில்லை என  போலீஸாரிடம் புகார் அளித்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரிடம் கயத்தாறு காட்டுப் பகுதியில் எரிக்கப்பட்ட பெண்ணின் உடல் அருகே கண்டெடுக்கப்பட்ட துண்டு துணிகளைக் காட்டிய போது, அது தன்  தாயார் காந்திமதியின் உடைகள்தான் என அடையாளம் காட்டினார். அதனைத் தொடர்ந்து, கயத்தாறு காவல் நிலைய போலீஸார், காணாமல் போன தேதியன்று காந்திமதி எங்குச் சென்றார், யாருடன்  சென்றார் என விசாரணை நடத்தினர். அதில், படந்தாலைச்  சேர்ந்த காா் ஓட்டுநர் சண்முக பாண்டியன் என்பவருடன் மூதாட்டி காந்திமதி இறுதியாக காரில் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசாரின் சந்தேகப்பார்வை  சண்முக பாண்டியன் மீது திரும்பியது. அவரை பிடித்து போலீசார் தங்கள் பாணியில் விசாரணை நடத்தியதில் மூதாட்டி காந்திமதிக்கு.. கயத்தாறு காட்டுப் பகுதியில் நடந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. கொலை செய்யப்பட்ட காந்திமதி பணத்தை வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். இதையறிந்த அதே ஊரைச் சேர்ந்த சண்முக பாண்டியன்,  ஒன்றரை லட்சம் ரூபாயைக் காந்திமதியிடம்  கொடுத்து வட்டிக்கு விட்டு, மாதந்தோறும் தனக்கு வட்டி தரும்படி கூறியுள்ளார். இதைப் பெற்றுக்கொண்ட காந்திமதி சில மாதங்கள் வட்டியைச் சரியாகக் கொடுத்து அதன்பிறகு கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால், சண்முக பாண்டியன், தான் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டுள்ளார். அப்போதும், காந்திமதி பணத்தைக் கொடுக்காமல் தட்டிக்கழித்ததுடன், “கொடுக்க முடியாது உன்னால் முடிந்ததைச் செய்..” எனக் கூறியதாக கூறப்படுகிறது. இதனால், சண்முக பாண்டியன் காந்திமதியைத் தீர்த்துக்கட்ட விபரீத திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று காந்திமதி ஊரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, தனது நண்பரின் காரில்  வந்த சண்முக பாண்டியன், “உங்களை உங்கள் வீட்டில் விட்டு விடுகிறேன் பாட்டி..” எனக்கூறி காரில் ஏற்றி உள்ளார். இதை நம்பி காரில் ஏறிய காந்திமதியை செல்லும் வழியிலேயே சண்முக பாண்டியன் இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில், காந்திமதி காயமடைந்து மயக்கம் அடையவே கயத்தாறு , சாலைப்புதூர் சுங்கச்சாவடி அருகேயுள்ள காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று அங்கு வைத்து மீண்டும் காந்தி மதியை சண்முக பாண்டியன் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதில், காந்திமதி துடிதுடித்து உயிரிழந்த நிலையில், உடனே வைத்திருந்த பெட்ரோலை வைத்து காந்திமதியின்  உடல் மீது ஊற்றித் தீயிட்டுள்ளார். அதன்பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொடூர சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆன நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகள் மூலமும் , காந்திமதியின் செல்போன் அழைப்புகள் மூலமும் சண்முக பாண்டியன் தான் கொலையாளி என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து சண்முக பாண்டியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் மூதாட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்