ஏற்காட்டில், பள்ளி விடுதிக்குள் புகுந்து பிளஸ்2 மாணவர்களை சரமாரியாக தாக்கியதாக நெல்லையைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மான்ட்போர்டு ஆங்கிலோ இந்தியன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். ஆக. 6ம் தேதி பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இதையொட்டி, ஆதரவற்றவர்களுக்கு உதவுவதற்காக பள்ளியில் தயாரிக்கப்பட்ட கேக் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் ஏலம் விடப்படும். இதன்மூலம் திரட்டப்படும் நிதி, ஆதரவற்றவர்களின் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
அதன்படி, நடந்த ஏலத்தில் ராட்சத கேக் ஒன்றை பத்தாம் வகுப்பு மாணவர்கள் 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். இந்த கேக்கை ஏலம் எடுப்பதில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஏலத்தில் வெற்றி பெற்றதால் ஆத்திரம் அடைந்த பிளஸ்2 மாணவர்கள், ஏலம் எடுத்த 4 மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவன், தான் தாக்கப்பட்டது குறித்து சென்னையில் உள்ள தனது அண்ணன் மாணிக்கராஜா என்ற வாலிபருக்கு தகவல் அளித்துள்ளார். அவர், நெல்லையில் உள்ள உறவினர்களுக்கு தகவல் அளித்து, அவர்களில் சில பேரை உடனடியாக பள்ளிக்கு வரும்படி அழைத்துள்ளார்.
இதற்கிடையே, மாணிக்கராஜாவும் மான்ட்போர்டு பள்ளிக்கு வந்து சேர்ந்தார். அவரும், உடன் வந்த உறவினர்களும், பள்ளி விடுதிக்குள் புகுந்து தூத்துக்குடி மாணவனை தாக்கிய பிளஸ்2 மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதனால் சம்பவத்தன்று பள்ளி விடுதி வளாகமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. விடுதி ஊழியர்கள், பள்ளி நிர்வாகிகள் அங்கு வந்ததால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ஏற்காடு காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 10 பேர் கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த துரைராஜ் (23), சரவண ஐயப்பன் (22) ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.