அண்மையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு அரசு மட்டுமல்லாது பல்வேறு தரப்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டது. நடிகர் விஜய்யும் 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பாக நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய மாவட்ட தலைவர் சபின் என்பவர் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டது. 'தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அந்த ஆம்புலன்ஸ் சேவையை அண்மையில் நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்திருந்தார்.
விஜய் மக்கள் இயக்கம், மக்கள் பயன்பாட்டிற்காக இலவச ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வாயிலாக செய்திகள் பரவின. விஜய் பாடலின் பின்னணியில் சர்..சர்... என சாலையில் ஆம்புலன்ஸ் பறக்கும் அலப்பறை காட்சிகள் வெளியாகி இருந்தது. ஆனால் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்ட இரண்டு நாளிலேயே அந்த ஆம்புலன்ஸ் மாயமானது. இந்நிலையில் மாயமான ஆம்புலன்ஸ் என்ன ஆனது என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. இறுதியில் அது கன்னியாகுமரியில் காருண்யா ஆம்புலன்ஸ் சேவை என்ற பெயரில் இயங்கி வந்தது தெரிய வந்ததுள்ளது. அதன் பின்னரே இந்த சம்பவத்தின் முழு தகவல் வெளியானது.
விஜய் மக்கள் நிர்வாகியான சபின் நடிகர் விஜய்யின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக காருண்யா ஆம்புலன்ஸ் உரிமையாளர் சுனில் என்பவரிடம் தனக்கு இரண்டு நாட்கள் வாடகைக்கு ஆம்புலன்ஸ் வேண்டும் என கேட்டு எடுத்து வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு 'தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரத்திற்காக நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு சேவைக்காக இலவசமாக இந்த ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டுள்ளது என பிரபலப்படுத்தியுள்ளார். அதோடு மட்டுமல்லாது வாடகைக்கு எடுத்து வந்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆம்புலன்சை புஸ்ஸி ஆனந்தை வைத்து தொடங்கி வைத்தார். ஆனால் அந்த ஆம்புலன்ஸின் உரிமையாளரான சுனில் தன்னிடம் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஆம்புலன்ஸில் 'விஜய் மக்கள் இயக்கம்' என ஸ்டிக்கரை ஒட்டி இயக்குவதை அறிந்து ஆம்புலன்ஸை மீண்டும் எடுத்துச் சென்றுள்ளார். இது குறித்து மற்ற நிர்வாகிகள் தலைமைக்கு புகார் அளித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.