திருவாரூர் மாவட்டம் பவித்திரமாணிக்கத்தில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜின் மகள் செல்வப்பிரியா - விக்னேஷ் ஆகியோரது திருமணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.08.2023) தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் திட்டங்கள், சாதனைகள் அத்தனையும் உங்களுக்கு நன்றாக தெரியும். தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை எல்லாம் எந்த அளவிற்குப் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்குப் புரியும். நேற்று முன்தினம், 25 ஆம் தேதி, திருக்குவளையில் கலைஞர் படித்த பள்ளியில் தொடங்கிய திட்டம்தான் காலை உணவுத் திட்டம். இது தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டம் அல்ல. எனவே சொன்னதை மட்டும் அல்ல, சொல்லாததையும் செய்யும் ஆட்சிதான் இன்றைக்கு இருக்கும் திராவிட மாடல் ஆட்சி.
அதேபோல் வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று கலைஞர் பெயரால் அமைந்திருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்படவிருக்கிறது. ஒரு கோடிக்கும் குறையாமல், அதைவிட அதிகமாகத்தான் வரும் என்று இன்றைக்கு கணக்கு விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு வந்தாலும் கவலை இல்லை. யார் யாருக்குச் சேர வேண்டுமோ அவர்களுக்கு நிச்சயமாக அந்த தொகை சென்று சேரப்போகிறது. இப்படிப்பட்ட இந்த ஆட்சிக்குத்தான் இன்றைக்கு நீங்கள் துணை நின்று கொண்டிருக்கிறீர்கள். எப்படி தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி உருவாகுவதற்கு, திராவிட மாடல் ஆட்சி உருவாக்குவதற்கு காரணமாக இருந்தீர்களோ, அதேபோல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஒரு சிறப்பான ஆட்சி உருவாக நீங்கள் எல்லாம் காரணமாக இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, டி.ஆர்.பி. ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் உ. மதிவாணன், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர் என். கௌதமன், சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கே. கலைவாணன், கே.மாரிமுத்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் வை.செல்வராஜ், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் கோ. பழனிச்சாமி, சிவபுண்ணியம், பத்மாவதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.