
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ராமச்சந்தர். இவர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காகக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று (11.03.2025) காலை அவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது அவர் மருத்துவமனையில் வழக்கத்திற்கு மாறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் மருத்துவமனையில் இருந்த ஊழியர்களிடம் தன்னை வெறிநாய் கடித்துவிட்டதாகக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராமச்சந்தரை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
அதன்படி தனி வார்டில் அவர் அனுமதிக்கப்பாட்டர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மதிய நேரத்தில் சிகிச்சையில் இருந்த போது திடீரென அங்கிருந்த அறிவிப்புப் பலகையின் கண்ணாடியை உடைத்து தனது கழுத்து மற்றும் உடலின் பிறபகுதிகளில் தன்னைத் தானே தாக்கி உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது கையில் கண்ணாடி இருந்ததால் ராமச்சந்தரின் அருகே யாரும் செல்ல இயலவில்லை. இதற்கிடையே மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்புத்துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்தனர். அதன் பின்னர் அவரை மீட்டு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு உயிரை மாய்த்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைக்கிறது.