தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சியின் 42ஆவது வார்டில் வாக்களிக்க ஒரு பெண் கைக்குழந்தையுடன் வருகை தந்தார். அவரது அடையாள அட்டையை பார்த்த தேர்தல் அலுவலர்கள் உங்களுடைய வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று அவரிடம் கூறியுள்ளனர். அதற்கு அந்தப் பெண் நான் இப்போதுதான் வருகிறேன் என்று எடுத்துக்கூறியும், ஏற்கனவே அவரது வாக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதால் அவரை அதிகாரிகள் வாக்களிக்க விடவில்லை.
இதையடுத்து, அதிருப்தியில் வெளியே வந்த அந்தப் பெண், "நான் படிக்காத முட்டாளு... இந்த ஒரு உரிமைதான் எனக்கு இருக்கு... அதை ஏன் மறுக்குறீங்க... வசந்தினு யாரோ இங்கிலீஷ்ல கையெழுத்து போட்டு என் ஓட்ட போட்டுருக்காங்க" என வாக்குச்சாவடியின் வளாகத்திலேயே கண்ணீர் வடித்தபடி ஆவேசமாக பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.