![prp](http://image.nakkheeran.in/cdn/farfuture/kALg9eFz1KOIq4SsI0bpo_VnlWm52VvhYnKUiWx02j4/1533347672/sites/default/files/inline-images/prpandian.jpg)
கிருஷ்ணசாமியின் இறப்பிற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தி கண்டனம் தெரிவித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலையில் விளக்குடியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.
பின்னர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’தமிழ் நாட்டில் ஜல்லிகட்டு போராட்டத்தில் மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராக தீவிரமாக போராடி அனுமதியும் பெற்றனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத மோடி அரசு நீட் தேர்வை வலுகட்டாயமாக திணித்தனர்.
தொடர்ந்து தற்போது காவிரி, ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட போராட்டங்களில் மாணவர்கள் மோடி அரசின் துரோகத்திற்கு எதிராக போராட்டக்களங்களில் களமிறங்குவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை முன்னறிவிப்பு ஏதுமின்றி கேரளா போன்ற மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத மாணவர்களை அனுப்பி வைத்து அச்சுறுத்தி வருகிறது.
தமிழக மாணவர்களின் கல்வி வளர்ச்சியை அழிப்பதற்கும், எதிர்கால வாழ்க்கையை சீரழிப்பதற்கும் உள்நோக்கத்தோடு திட்டமிட்டு மோடி அரசு செயல்படுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
மேலும் தமிழக மாணவர்களின் விடைத்தாள்களுக்கும் பாதுகாப்பில்லை. மாணவர்கள் தேர்வு எழுதும் மையம் குறித்த விபரம் குறித்து தமிழக அரசிடம் வழங்கவில்லை. இந்நிலையில் விடைத்தாள்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கப்படுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும். மாணவர்களுக்கு உண்மையான மதிப்பெண் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் தேர்வு எழுதியுள்ள மாணவர்களின் முழு விபரம் மாவட்டந்தோறும் உடன் வெளியிட வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களுக்கும் உரிய தகவல்கள் தெரிவித்து மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதுகாத்திட வேண்டும்’’ என்றார்.