Skip to main content

“இனிவரும் நாட்களில் ஊரடங்கை அரசு கடுமையாக செயல்படுத்த வேண்டும்..” - ராமதாஸ்

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

"The government should strictly enforce the curfew in the coming days." - Ramadoss


இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவிவருகிறது. அதேபோல், தமிழகத்திலும் அதன் தாக்கம் மிகத் தீவிரமாக இருந்துவருகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையும், மரணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு, சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில், தற்போதுள்ள ஊரடங்கிலும் மக்கள் வெளியே வருகிறார்கள் அதனால், இனி வரும் நாட்களில் இன்னும் கடுமையான ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 3 நாட்களாக முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஆனால், சாலைகளில் வாகனங்கள் மற்றும் தனி மனிதர்களின் நடமாட்டம் தடையின்றி தொடர்வதைப் பார்க்கும்போது, எந்த நோக்கத்திற்காக முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறதோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற ஐயம் எழுகிறது.

 

தலைநகர் சென்னையில் எந்த நேரம் பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒருசில நிமிடங்களில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்வதையும், இரு சக்கர ஊர்திகளில் பலரும் பறப்பதையும் பார்க்க முடிகிறது. தமிழகத்தின் அனைத்து மாநகர, நகர, கிராமப்புறங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. ஊரடங்கு என்ற பெயரில் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. ஆனால், சாலைகளிலும், தெருக்களிலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மக்கள் நடமாட்டம் நீடிக்கிறது. அவர்களில் பலரும் முகக்கவசம் கூட அணியாமல் நடமாடிக்கொண்டிருக்கின்றனர். சாலைகளைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதா? என்ற வினா மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

 

அத்தியாவசியப் பொருட்கள் தவிர்த்த பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டதன் நோக்கமே,  அவற்றுக்கு மக்கள் செல்வதை தடுக்க வேண்டும்; அதன் மூலம் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதைத் தடுத்து, கரோனா பரவல் சங்கிலியை அறுத்தெறிய வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது ஊரடங்கு மதிக்கப்படும் விதத்தைப் பார்க்கும்போது கரோனா பரவல் சங்கிலியைத் துண்டிக்க முடியாது.

 

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு வெற்றிபெறுவதும், அதன் மூலம் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படுவதும் பொதுமக்களாகிய நமது கைகளில்தான் உள்ளது. சுதந்திரம், தனி நபர் உரிமைகளைத் திகட்டத் திகட்ட அனுபவித்த நம்மால் வீட்டுக்குள் அடங்கி இருப்பது சிரமம்தான். ஆனால், நமது உயிரையும் மற்றவர்களின் உயிர்களையும் காப்பாற்றிக்கொள்ள இதைத் தவிர வேறு வழியில்லை. ஊரடங்கு என்பது கரோனாவை ஒழிப்பதற்கான கசப்பு மருந்தாகும். சுயநலன் கருதியும், பொதுநலன் கருதியும் இக்கட்டுப்பாடுகளை அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

 

கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், தினமும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும்  மிகவும் கவலையளிக்கின்றன. தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் ஒன்றே முக்கால் லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் சுமார் 30,000 பேர் கரோனா நோயால் பாதிக்கப்படுகின்றனர். தினமும் உயிரிழப்போரின் எண்ணிக்கை 300-ஐத் தொட்டுவிட்டது.  

 

நமது கண் முன்னால் நேற்றுவரை நன்றாக நடமாடிக்கொண்டிருந்தவர்கள் இன்று உயிரிழக்கும் துயரம் தமிழ்நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பவர்கள் கூட 24 மணி நேரத்தில் உயிரிழக்கும் கொடுமை நடக்கிறது. இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு சுடுகாடுகளில் பல மணி நேரம் காத்திருக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் கொடுமைகளை தினமும் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இவ்வளவுக்குப் பிறகும் எந்த பொறுப்புமின்றி சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் ஆபத்தை விலைக்கு வாங்குவதாகவே பொருள்.

 

கரோனா ஆபத்திலிருந்து தப்பவும், தொற்று பரவலைத் தடுக்கவும் அனைவரும் வீடுகளில் அடங்கி இருப்பதுதான் ஒரே தீர்வு. எனவே ஊரடங்கை மக்கள் மதித்து நடக்க வேண்டும். வீடுகளை விட்டு எவரும் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்; வெளியில் வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். வெளியில் சென்று வரும்போது கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.

 

இவற்றைவிட முக்கியம் தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுவதை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும். முழு ஊரடங்கை பிறப்பித்ததுடன் கடமை முடிவடைந்ததாக நினைத்து ஒதுங்கிவிடக் கூடாது. நண்பகல் 12 மணிக்கு மேல் மருத்துவத் தேவை, அத்தியாவசியப் பணிகள் தவிர வேறு எதற்காகவும், எவரும் சாலைகளில் நடமாட வேண்டிய அவசியம் இல்லை. அந்த நேரத்தில் சாலைகளில் செல்பவர்கள் எதற்காக செல்கின்றனர்? அவர்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளனவா? என்பதை காவல்துறையினர் விசாரிக்க வேண்டும். ஊரடங்கை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மீண்டும் அந்தத் தவறை செய்ய மாட்டார்கள். ஊரடங்கை கடுமையாக செயல்படுத்தினால் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்குமோ? என்று அரசு அஞ்சக்கூடாது. மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. ஒரு நல்ல காரியத்திற்காக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில் தவறில்லை. எனவே, தமிழகத்தில் இனிவரும் நாட்களில் ஊரடங்கை அரசு கடுமையாக செயல்படுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.