சென்னை - நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்காக மதுரையிலிருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டு தாமதப்படுத்தப்பட்டதாகப் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 6.25 மணிக்கு திருச்சி வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலானது 7.25 மணி வரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படாமல் திருச்சி ரயில் நிலையத்தில் சுமார் 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வந்தே பாரத் ரயில் திருச்சி ரயில் நிலையத்தை கடந்து செல்வதற்கு வசதியாகவே வைகை ரயில் எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைக்கப்பட்டதாக புகார்கள் கிளம்பியுள்ளது.
சுமார் 46 வருடங்களாக இயக்கப்பட்டு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை நேற்று வந்த வந்தே பாரத் ரயிலுக்காக தாமதப்படுத்துவதா என பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த ரயில் மட்டுமல்லாது வந்தே பாரத்தால் குருவாயூர், சோழன் ரயில்களின் நேரத்தையும் மாற்றியமைக்க தெற்கு ரயில்வே திட்டமிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று மாலை வைகை எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர். இருந்தாலும் இதனை ஏற்காத பயணிகள் மற்ற ரயில்களின் பயண நேரம் பாதிக்கப்படாமல் வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.