கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானுர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகமணி. இவரது மகள் நர்மதா. அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் நர்மதாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு இரு விட்டாரின் முழு சம்மதத்தோடு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு சர்வேஷ் மற்றும் நபீஸ் என்ற இரண்டு வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நர்மதாவின் கணவர் முருகன் குடிப்பழத்திற்கு அடிமையானதாகவும் இதனால் தனது கணவரை குடிப்பழக்கத்தில் இருந்து திருத்த நர்மதா பல ஆண்டுகளாக பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடைசி முயற்சியாக குலதெய்வம் கோயிலுக்கு சென்று மது பழக்கத்திலிருந்து வெளிவர கயிறு கட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் குலதெய்வம் கோவிலுக்கு சென்று விட்டு கயிறு கட்டிய பிறகும் முருகன் மறுபடியும் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது.
நர்மதா தனது கணவரை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க எடுத்த பல்வேறு முயற்சிகளும் வீணாகப் போய் உள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி மன வேதனையிலும் விரக்தியிலும் இருந்த நர்மதா தனது இரண்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு பட்டப் பகலில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தனது வீட்டில் இருந்த மண்ணணெண்ணய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் தீ மல மலவென உடல் முழுக்க பற்றி எரிந்ததால் என்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் எனக் கூச்சலிட்டு உள்ளார்.
இதைப் பார்த்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நர்மதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நர்மதா உயிரிழப்பதற்கு முன்பே நர்மதாவின் சகோதரர் மற்றும் தாயிடம் "அம்மா நான் உயிர் பிழைக்க மாட்டேன் எனது இரண்டு பிள்ளைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே பேசிய வீடியோ வெளியாகி காண்போரின் மனதை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவம் குறித்து அவரது தந்தை நாகமணி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் தனசேகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குடிப்பழக்கத்தை கணவர் கைவிடாததால் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.