![Selvaperunthagai condemns Modi Trump](http://image.nakkheeran.in/cdn/farfuture/6bCB8WCyOY495H37_Tj0Q7fcKvdFpJ4bpWPBbykGxUE/1738847190/sites/default/files/inline-images/51_109.jpg)
அமெரிக்கா அதிபரான டொனால்ட் டிரம்ப், கடந்த ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற போது பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும் அறிவிப்பு, உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவு, சட்டவிரோத குடியேற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள், பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை ரத்து என அதிரடி உத்தரவுகளை அறிவித்தார். டொனால்ட் டிரம்பின் அதிரடி உத்தரவுகள், மற்ற நாடுகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
அதன்படி, சட்டவிரோதமாக குடியேறிவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு திரும்பி அனுப்பும் நிர்வாக உத்தரவிலும் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மெக்சிகோ, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதமாக குடியேறிவர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. அதில் டெக்காசில் இருந்து புறப்பட்ட சி-17 விமானத்தில் 205 இந்தியர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. வெள்ளை மாளிகையோ, இந்திய அரசோ இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்தது.
இந்தநிலையில் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் கை மற்றும் கால்களில் விலங்கு போடப்பட்டு அழைத்துவரப்பட்டது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் எல்லைப் பாதுகாப்புபடை இந்தியர்களை 'ஏலியன்' எனக் குறிப்பிட்டு வெளியான இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வீடியோ காட்சிகள் குறித்த விவாதம் நாடாளுமன்றத்திலும் பெரும் புயலை கிளப்பியது.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை, “ அமெரிக்கா ராணுவ விமானத்தின் மூலம், இந்தியர்கள் 104 நபர்கள் கைவிலங்குகள் மற்றும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, 40 மணி நேரத்திற்கும் அதிகமாக பயணத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 19 பெண்களும் அடங்குவர். அவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருந்துள்ளது. மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் பயங்கரவாதிகள் போன்று இந்தியர்களை வெளியேற்றியதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளியுறவுத்துறை அமைச்சர் இது நடைமுறையில் உள்ளதான் என்கிறார். கொலம்பியா போன்ற ஒரு சிறிய நாடு, தனது நாட்டின் பிரஜைகளுக்கு துணை நின்று, அமெரிக்கா மீது தனது கோபத்தை காட்டியது. ஆனால், விஸ்வகுரு என்று பாஜகவினரால் பெருமைப்படுத்தப்பட்டு, ஒரு பொய் பிம்பத்தை கட்டி வைத்திருக்கும் பிரதமர் மோடியால் தனது குடிமக்களை அவமானத்திலிருந்து பாதுகாக்க முடியாதா? இதற்குதான் இந்திய நாட்டினரின் வரிப்பணத்தில் இருந்து 100 கோடிக்கும் மேல் செலவு செய்து'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியை நடத்தினாரா பிரதமர் மோடி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.