அண்மையில் தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட அறிவிப்புகள் வெளியான நிலையில் தமிழகத்தில் ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைந்ததாக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சுதந்திர இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில் இந்தியா முழுமைக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கையை வைத்து வருகின்றனர். குறிப்பாக 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி கொள்கை திருவிழாவான முதல் மாநில மாநாட்டில் சமூக நீதியை பின்பற்றும் மண்ணான தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நான் ஆணித்தரமாக வலியுறுத்தி இருந்தேன்.
மாநாட்டிற்கு பிறகு நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். இந்த விவகாரத்தில் மாநில அரசு தங்களது மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வை நடத்துவதற்கு அரசின் சட்டத்தில் வழி இருக்கிறது. எனவேதான் பீகார் மாநில அரசும், கர்நாடக மாநில அரசும் ஏற்கனவே சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்புகளை நடத்தி முடித்து புள்ளி விவரங்களை கையில் வைத்துள்ளன.
மேலும் தற்போது தெலுங்கானா அரசும் வெறும் ஐம்பது நாட்களில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படும் சில திட்டங்களை மற்ற மாநில அரசுகள் பின்பற்றுகின்றன என தமிழக ஆட்சியாளர்கள் பெருமை பேசுகின்றனர். ஆனால் சமூக நீதிக்கு அடித்தளம் அமைக்கும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வினை நடத்தி முடித்த மற்ற மாநிலங்களை பின்பற்ற தயங்குவது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை. தற்போதுள்ள ஆட்சியாளர்கள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வைக் கூட நடத்தாமல் தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டே வருகிறார்கள்.
'பெரியாரே எங்கள் தலைவர்; தலைவர்களுக்கெல்லாம் தலைவர்' என்று சூழலுக்கு ஏற்றவாறு தங்களின் சுய லாபத்திற்காக மட்டுமே அவரைப் பற்றி பெருமை பேசும் தற்போதைய ஆட்சியாளர்கள் சமூகநீதியை காக்கும் செயல்படான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தையே முன்வைத்து வருகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும். ஆனால் அதற்கு முன்னோட்டமாக திகழும் 'காஸ்ட் சர்வே' என்ற ஆய்வை மாநில அரசே நடத்தலாமே. அதற்கும் தங்களிடம் அதிகாரம் இல்லை என்று தற்போதைய ஆட்சியாளர்கள் சொல்லப் போகிறார்களா? அப்படி எனில் தெலுங்கானா மாநில அரசுக்கு மட்டும் அது சாத்தியமானது எப்படி? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் ஒன்றிய மற்றும் தமிழக ஆட்சியாளர்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறார்கள்.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க ஒரே வழியான உண்மையான சமநீதி, சமத்துவ நீதி, சமூக நீதி வழங்கும் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு முன்னோட்டமாக அதற்கான ஆய்வை மேற்கொள்ளாமல் இனியும் தாமதித்தால் தற்போதைய ஆட்சியாளர்களின் போய்வேடம் தானாகவே கலையும் நாள் வெகு தொலைவில் இல்லை' என தெரிவித்துள்ளார்.