Skip to main content

'ஏன் இந்த அடாவடித்தனம்?'-டாஸ்மாக் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Published on 18/11/2024 | Edited on 18/11/2024
nn

'குத்தகை காலம் முடிந்து விட்டால் டாஸ்மாக் மதுபானக் கடையை காலி செய்ய வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள காமன்தொட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பு போலி மதுபானம் விற்றதாக என் மீது போடப்பட்ட வாழ்கை ரத்து செய்ய வேண்டும் என சந்தர் என்பவர் சென்னையில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'டாஸ்மாக் மதுபான கடைக்காக தான் கொடுத்திருந்த இடத்தின் குத்தகை முடிந்த பின்னர் கடையை காலி செய்யும்படி வலியுறுத்தினோம். ஆனால் எனக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் போலியாக மதுபானம் விற்றதாக பொய் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே எனக்கு எதிரான புகாரை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

முன்பாக இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 'தமிழக முழுவதும் குத்தகை காலம் முடிந்த பின்னரும் எத்தனை டாஸ்மாக் கடைகள் காலி செய்யப்படாமல் செயல்பட்டு வருகிறது' என டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆஜரானார். குறிப்பிட்ட கடை கடந்த மூன்று நாட்களுக்கு முன் காலி செய்யப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

குத்தகை காலம் 2019 ஆம் ஆண்டு  முடிந்த பின்னரும் டாஸ்மாக் கடைகளை காலி செய்யாதது ஏன்? இதை எதிர்த்து கேள்வி கேட்டால் காவல்துறையை வைத்து வழக்கு பதிவு செய்வீர்களா? இப்படி செய்வது ஒரு பழிவாங்கும் அடாவடித்தனம் அல்லவா? ஏன் இப்படி அடாவடித்தனம் செய்கிறீர்கள்? டாஸ்மாக் கடைகள் எங்கள் பகுதியில் வேண்டாம் என மக்கள் தெரிவித்தால் காவல்துறையை வைத்து கடையை நடத்துவீர்களா? குத்தகை காலம் முடிந்தால் மட்டுமல்ல மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். இதபோல மீண்டும் ஒரு புகார் நீதிமன்றத்திற்கு வந்தால் நீதிமன்றம் இதனை தீவிரமாக கருதும்' என தெரிவித்து காவல்துறை சுந்தர் மீது பதிவு செய்த புகாரை தள்ளுபடி செய்து நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்