
மதுரை கூலித் தொழிலாளியிடம் ரூபாய் 10 லட்சம் பணம் பறித்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் வசந்தி, முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (23/08/2021) விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், "அரசுப் பணியாளர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை ஏற்க இயலாது. வழக்குப் பதியப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் காவல் ஆய்வாளரை இன்னும் கைது செய்யாதது ஏன்? இதுபோல தாமதப்படுத்துவது மனுதாரருக்கு சாதகமாக அமைந்துவிடாதா? இது போன்ற செயல்களால் பொதுமக்களுக்கு காவல்துறை மீதான நம்பிக்கை குறைந்துவிடும். காவல்துறை ஆய்வாளர் வசந்தி, ஓட்டுநர் ஆகியோரை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்து, காவல்துறை ஆய்வாளர் வசந்திக்கு எதிரான ஆவணங்களை முறையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 2- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.