ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்த நிலையில், சக ராணுவ வீரர்களிடம் 'ஏன் என் கணவரை நன்றாக பார்த்துக் கொள்ளவில்லை' என ராணுவ வீரரின் மனைவி கண்ணீருடன் கேள்வி எழுப்பியது மனதை உறையவைத்தது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளது மணலி கிருஷ்ணபுரம். இப்பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (34) எல்லை பாதுகாப்புப் படையில் சேர்ந்து கடந்த 15 வருடங்களாக திரிபுராவில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு சந்தியா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது சந்தியா மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.
ஜெகதீஷ் கடந்த ஆறு மாதங்களாக டெல்லியில் கமாண்டோ பயிற்சி பெற்று வந்த நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. அப்பொழுது சுற்றி இருந்த ராணுவ வீரர்களிடத்தில் 'ஏன் என் கணவரை நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்ளவில்லை ' எனக் கேட்டது அங்கிருந்த சக ராணுவ வீரர்களைக் கண்ணீரில் மூழ்க வைத்தது.