விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது மரக்கோணம். இந்த ஊராட்சிக்கு உட்பட்டது கம்மம்தாங்கல் என்ற சிறு கிராமம். இந்தக் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். அங்குள்ள ஏரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி கிணற்றிலிருந்து ஊரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மின்சார மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. திறக்கப்பட்ட பைப்லைன் மூலம் ஊரில் உள்ள வாட்டர் டேங்கில் தண்ணீர் நிரப்பப்பட்டு அதைக் கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக விநியோகிக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், நேற்று (19.08.2021) காலை இந்த ஊரில் உள்ள வாட்டர் டேங்க் ஆப்பரேட்டர் முருகன் வழக்கம்போல் கிணறு அருகில் உள்ள மோட்டாரை இயக்கி வாட்டர் டேங்க்கில் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது கிணற்றிலிருந்து வெளியேறிய தண்ணீரைப் பிடித்து தாகத்திற்காக குடித்துள்ளார். அந்தத் தண்ணீரில் ஒருவித விஷமருந்து வாசனை வந்துள்ளது. உடனே தண்ணீர் இறைக்கும் மோட்டாரை நிறுத்திவிட்டு, கிணற்றை எட்டிப் பார்த்தபோது கிணற்றுக்குள் மீன் குஞ்சுகள் இறந்து கிடந்துள்ளன. அதைக் கண்டு திடுக்கிட்ட முருகன், உடனடியாக மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்குத் தகவல் அளித்துள்ளார். அங்கிருந்து காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் கிணற்றிலிருந்து தண்ணீரை முழுமையாக வெளியேற்றினர். அப்போது கிணற்றுக்குள் விவசாயப் பயிர்களுக்குத் தெளிக்கப்படும் விஷ பூச்சிக்கொல்லி மருந்து பாக்கெட் கிடந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்துமாறு புகார் அளித்துள்ளனர். மேலும், இந்தக் கிணற்று நீரை பரிசோதனைக்காக விழுப்புரத்தில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கும் அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வளத்தி போலீசார் வழக்குப் பதிவுசெய்து, குடிநீரில் விஷம் கலந்த நபர் யாராக இருக்கும்? எதற்காக மக்களின் உயிரோடு விளையாடக் கூடிய இப்படிப்பட்ட விபரீதத்தில் ஈடுபட்டனர்? அவர்கள் யார்? என்ன காரணம்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.
வாட்டர் டேங்க் ஆப்பரேட்டர் முருகனின் முன்னெச்சரிக்கை காரணமாக அக்கிராமத்தில் விஷம் கலந்த நீரைக் குடித்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் முருகனை பாராட்டிவருகின்றனர். இச்சம்பவம் செஞ்சி மேல்மலையனூர் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.