சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பத்திரிகையாளர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டு விசாரணை செய்வதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இதனைச் சுட்டிக்காட்டி உள்ள எடப்பாடி பழனிசாமி, 'பத்திரிகையாளர்களுடைய தொலைபேசிகளை பறிமுதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? முதல் தகவல் அறிக்கை வெளியானது முழுக்க முழுக்க அரசின் தவறுதான். அதை பத்திரிகையாளர்கள் பக்கம் திசை திருப்ப முயல்வது கண்டிக்கத்தக்கது.
இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் என்பதால் இந்த அரசு ஏதேனும் அழுத்தம் தருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. யார் அந்த சார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் வகையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் மாநில அரசின் தலையீடு இல்லாத முறையான விசாரணை வேண்டும். எனவே இந்த வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என' வலியுறுத்தியுள்ளார்.