அண்மையில் விசிகவில் இருந்து விலகியிருந்த ஆதவ் அர்ஜுனா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவருக்கு கட்சியில் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார்.
இந்நிலையில் பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்திக்கையில், இது குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், ''ஆதவ் அர்ஜுனா நேராக விஜய்யை பார்த்துவிட்டு திருமாவளவனை போய் பார்த்து இருக்கிறார். முதலில் நீங்க போங்க பின்னாடி நான் வரேன் என சொல்வதாக இருக்குமா? என எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த சந்திப்பில் அரசியல் நாகரீகம் இருக்கிறது உண்மை. அதில் மகிழ்ச்சி. ஆனால் வளர்த்த கிடா மார்பில் பாயவில்லை மடியில் தான் பாய்ந்தது என வசனம் பேசிக் கொண்டிருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் திருமா இருப்பாரா என்பது நிஜமாக சந்தேகமாக இருந்து கொண்டே இருக்கிறது. ஆதவ் முதலில் போ பின்னர் ஆதவனை விட்டு நான் வருகிறேன் என சொல்லுகிறாரா என தெரியவில்லை.
எல்லோருமே இணையதளத்தில் மட்டும் அரசியல் செய்யாமல் தளத்தில் அரசியல் செய்ய வேண்டும். திரைப்படத்தில் மட்டும் அரசியல் செய்யாமல் தரைப்படத்திலும் அரசியல் செய்ய வேண்டும் என்பது தான் நான் அடிக்கடி சொல்வது. விஜய் திரையில் நடிக்கும் போது எல்லா தலைவர்களும் தரையில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். இறங்கி வந்து மக்களோடு மக்களாக ஒரு தலைவர் பணியாற்றுகிறாரோ அவர் மக்கள் தலைவராக இருக்க முடியும். இல்லையென்றால் மக்கள் நடிகராக வேண்டுமானால் இருக்கலாம். விஜய் என்ன முடிவு செய்கிறார் என்று பார்ப்போம்'' என்றார்.