Skip to main content

ஏழு பேரை மன்னிப்பதற்கு ராகுல்காந்தி யார்? -சீமான் ஆதங்கம்!

Published on 16/03/2018 | Edited on 16/03/2018
rajiv


 

பரோலில் வந்திருக்கும் ராஜீவ் கொலை வழக்கு – ஆயுள் கைதி ரவிச்சந்திரனை சந்திப்பதற்கு அருப்புக்கோட்டை வந்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அளித்த பேட்டி இதோ - 
 

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கவே மாட்டார்கள். எந்தக் கட்சி மத்தியில் அதிகாரத்துக்கு வந்தாலும்,  கர்நாடக தேர்தல் வெற்றியைத்தான் கணக்கில் எடுத்துக்கோள்வார்களே தவிர, தமிழ்நாட்டு மக்களின் உரிமையை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதுவும் இப்போது இருக்கின்ற பாரதிய ஜனதா அரசு தமிழ்நாட்டைக் கண்டுகொள்ளாது.  அதுதான் பார்க்கிறோமே? பாராளுமன்றத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் கட்சி பாகுபாடின்றி போராடுகிறார்கள். ஆட்சியாளர்கள், எதையாவது கவனத்தில் எடுத்துக்கொள்கின்றார்களா? பிரதமர் இதுகுறித்து வாய் திறக்கிறாரா? சரி, மத்திய காங்கிரஸ் தலைமையின் கருத்தென்ன? ஒண்ணுமே கிடையாது. ஏனென்றால், அந்தக்கட்சி வாய் திறந்தால், மே 5-ஆம் தேதி தேர்தலில், எந்தக் கட்சி பேசுகிறதோ, அந்தக் கட்சி தோற்கும். காவிரி நீர் என்பது நமக்கு உயிர்ப்பிரச்சனை. அவர்களுக்கு அது அரசியல். இறையாண்மை, தேசிய ஒருமைப்பாடு, உயர்ந்த நீதியை மதிப்பதெல்லாம் தமிழர்களுக்கு மட்டும்தான். மற்ற மாநிலங்களுக்கு கிடையாது. 
 

ரவிச்சந்திரன் 27 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். அவருக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். இனிமேல்தான் அவர் குடும்பத்தைக் கவனிக்க வேண்டும். இவருக்கு மட்டுமல்ல. தம்பி பேரறிவாளனிலிருந்து தம்பி ராபர்ட் பயாஸ் வரைக்கும் எல்லாருக்குமே இதே பிரச்சனைதான். கால் நூற்றாண்டைக் கடந்து கண்ணீரோடும், துயரத்தோடும் இவர்கள் 7 பேரின் சிறை வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. 161-வது விதியைப் பயன்படுத்தி தமிழக அரசு விடுதலை செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இவர்களை விடுதலை செய்வதற்கான உரிமை மத்திய அரசுக்கு இருக்கிறதா? மாநில அரசுக்கு இருக்கிறதா? இந்த முடிவு எடுப்பதற்குள் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. மத்தியில் அதிகாரத்தில் இருப்பவர்கள் நமது உணர்வை எப்போதும் மதிப்பவர்களாக இல்லை. எங்களைப் போன்றவர்களின் கையில் அதிகாரம் இருந்தால், முதலில் கதவைத் திற, எல்லாரையும் வெள்யில் விடு, அதற்குப் பிறகு சட்டப் போராட்டத்தை நடத்திக்கொள்வோம் என்று நினைப்போம். இப்போது இருக்கின்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? மேலே இருக்கிற பி.ஜே.பி. என்ன சொல்லுதோ அதைச் செய்யுது. ஒவ்வொரு நாளும் ஆட்சியை தக்க வைப்பதே இந்த ஆட்சியின் சாதனையாக இருக்கிறது. தமிழக ஆட்சியாளர்களிடம் 7 பேரின் விடுதலை குறித்துப்  பேசுவதில் ஒரு பயனும் இல்லை. 

 

Seemaan


 

ராஜீவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வருபவர்களை மன்னிப்பதற்கு ராகுல் காந்தி யார்? நாங்கள்தான் அவரை மன்னிக்க வேண்டும்.  மொத்த இனத்தையும் கொன்று குவித்துவிட்டு, பிணமாக்கிவிட்டு, என்ன மன்னிக்கிறது? 10 ஆண்டு காலம் பதவியில் இருந்தபோது, மன்னித்து விடுதலை செய்திருக்கலாமே? தூக்குப் போடுகின்ற இடத்தில் கேமராவை வைத்தீர்களா? இல்லையா? ரசிக்க வேண்டும் என்பதற்காக. இது எதுவுமே தெரியாத முட்டாப்பயல்களா நாங்களெல்லாம்? பாலச்சந்திரனைப் பிடித்து இலங்கை ராணுவம் வைத்திருந்தபோது, பிரபாகரன் குடும்பத்தில் ஒருவரும் உயிரோடு இருக்கக்கூடாது என்று சொன்னது யாரு? என்ன மன்னிக்கிறது? எதை மன்னிக்கிறது?
 

விழிப்புணர்வு இருப்பதால்தான், உடல் உறுதியாக இருக்க வேண்டும் என்று மக்கள் மலைப்பயணம் மேற்கொள்கிறார்கள். இவ்வளவு வளர்ந்த நாடு.. நாட்டின் வளர்ச்சி குறித்துப் பேசும் நாடு.. பேரிடர் என்று வந்தால், அதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு நம்மிடம் என்ன வசதி இருக்கிறது? ஒன்றுமே இல்லை. அப்புறம் எதற்கு வல்லாதிக்கம் குறித்து, வளர்ச்சி குறித்தெல்லாம் பேச வேண்டும்? சுத்தப் பைத்தியக்காரத்தனம். விடுதலை பெற்று 70 ஆண்டுகாலம் ஆகிறது. இன்னும் மனிதக் கழிவை மனிதன் கையால் அள்ளிக்கொண்டிருக்கிறான். தினமும் விண்வெளியில் ராக்கெட் பாய்ந்துகொண்டிருக்கிறது. பெரிய கொடுமை இது. உலகத்தில் இருக்கின்ற  சின்னச்சின்ன நாடுகளில் காடுகளில் தீ பிடித்தால், உடனடியாக ஹெலிகாப்டரில் பறந்து தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கிறார்கள்; பொடியைத் தூவி விடுகிறார்கள். மண்ணைத் தூவி அணைத்து விடுகிறார்கள். இங்கு  காடுகளில் அடுத்து பரவாமல் இருப்பதற்கு, இடையிடையே வாய்க்கால் வெட்டி, துண்டித்துவிட்டிருக்க வேண்டும்.  இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா? நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் சொல்கிறார் – இருட்டில் எப்படி தேடுவது என்று. இருட்டில் நமக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை வந்துவிடுகிறது. இருட்டில் எங்களுக்குக் கண் தெரியாது; சண்டை போட முடியாது  என்று சொல்வீர்களா? எதற்காக ராணுவம் இருக்கிறது? இதெல்லாம் ஒரு பதிலா? எப்படிப்பட்ட நாட்டில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? இப்படி இருந்தால், இது நம் நாடு.. நம் தேசம்.. நம்மைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை எப்படி வரும்? மூன்று நாட்களாக காடு எரிந்தது அல்லவா? மழை வந்து அதுவாகத்தானே அணைந்தது? அந்த மூன்று நாட்களில் தீயை அணைப்பதற்கு அரசு எடுத்த முயற்சி என்ன? நினைச்சுப் பார்த்தால் நெஞ்சே வெடிச்சிரும். 

 

Rahul_Modi


 

காங்கிரஸ் வந்தாலும் கச்சத்தீவு கொடுத்தது கொடுத்ததுதான் என்று சொல்லும். பாரதிய ஜனதாவும் இதையே சொல்லும். ஈழம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இலங்கை ஒரே நாடு என்று சொல்வார்கள். இரண்டு பேரும் ஒண்ணுதான். இவங்க கதர் கட்டிய பி.ஜே.பி. அவர்கள் காவி கட்டிய காங்கிரஸ். இரு கட்சிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. ஒருவர் மதவாதி இன்னொருவர் மிதவாதி என்று கிடையாது. இருவரும் ஒன்றுதான். இடித்தது பா.ஜ.க. இடிக்க அனுமதித்தது யாரு? இரு கட்சியினருமே தேசத்துரோகிகள். ஒற்றைக்கட்சி ஆட்சி முறையையே இந்தியாவில் ஒழிக்க வேண்டும். இது நடக்கவில்லையென்றால், நாட்டில் ஒருமைப்பாடு இருக்காது; இறையாண்மை இருக்காது; எந்த மாநிலமும் சமவிகிதத்தில் வளராது. நிர்வாகமும் அதிகாரமும் பரவலாக்கப்படாமல் நாடு வளரவே வளராது. இதற்கென்றே ஒரு அணி உருவாகும்.   பாரதிய ஜனதா, காங்கிரஸ் அல்லாத ஒரு அணி உருவாகி வருகிறது. 
 



 

சார்ந்த செய்திகள்